ராவணன்- இயக்குனர் மணிரத்னத்தின் படம். 'மாற்றான் மனைவியை ஒருவன் கடத்துகிறான்' என்ற கருவை இராவணன் என்ற தலைப்பின் மூலம் குறியீடாக பயன்படுத்துகிறார். இயக்குனர் ஒருவரே அனைத்து எதிர்பார்ப்புகளுக்கு காரணம். கூடவே ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் என கூடுதல் எதிர்பார்ப்பு.
வீரய்யா என்னும் கட்டப்பஞ்சாயத்துக்காரனை அவனது தங்கை திருமணத்தின் பொழுது சுட முயலுகிறார் தேவ் பிரகாஷ் என்னும் காவல் துறை அதிகாரி. அதிலிருந்து தப்பித்து விடும் வீராவின் இடமறிய, அவன் தங்கையை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சீரழிக்கின்றனர். தற்கொலை செய்துக் கொள்ளும் தங்கையின் மரணத்திற்கு பழி வாங்கத் துடிக்கும் வீரா, தேவ் பிரகாஷின் மனைவி ராகிணியை கடத்துகிறான். தன்னிடம் இருந்து எப்படியும் தப்பிக்க நினைக்கும் ராகிணி மீது மெல்லிய இழையாய் காதல் எழுகிறது வீராவிற்கு. பதினாலு நாட்கள் முடிவில் ராகிணியும் அந்த மெல்லிய இழையை உணர்கிறாள். மீட்க வரும் தேவ்விடம் வீரா ராகிணியை ஒப்படைக்க, ராகிணி மீது சந்தேகம் கொள்வது போல் வீராவை பிடிக்க தூண்டில் போடுகிறார் தேவ். தூண்டிலில் வீரா சிக்கினானா, இல்லையா என்பதுடன் படம் நிறைவுறுகிறது.
வீராவாக விக்ரம். கழுத்தில் சுடப்பட்ட பாத்திரத்தில் நடித்தாலும், கந்தசாமியில் விட்ட மீதி கொக்கரிப்பை இதில் 'பக்.. பக்..' என சத்தமிட்டு தீர்த்துக் கொள்கிறார். தண்ணீரில் விழும் ஐஸ்வர்யாவை பார்த்த நொடியில் இருந்து, 'ஐய்யோ.. வடைப் போச்சே!!' என்றே கடைசி வரை கவலையுறுகிறார். அசுர பலம் கொண்டவர் என்று பலர் வாய் மூலமாக சொல்லப்பட்டாலும், அதற்கு அவசியமில்லாமல் உடல்வாகுவை பார்த்ததுமே புரிந்துக் கொள்ளும்படி பரந்து விரிந்த தோள்களுடன் படம் முழுவதும் வலம் வருகிறார். உருட்டல், மிரட்டல், வலி, வேதனை, ஆசை என சகலத்தையும் கண் விழி இரண்டில் கொண்டு வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் சிரமப்பட்டு, மெனக்கட்டு நடித்து அசத்துகிறார். அதுவும் மணிரத்னம் இயக்கம் என்பதால் வஞ்சனையில்லாமல் நடித்துள்ளார்.
ராகிணியாக ஐஸ்வர்யா ராய் பச்சன். பெயரில் பச்சன் சேர்த்துக் கொண்ட பிறகு தமிழில் முதன் முறையாக தோன்றுகிறார். அழகு, நளினம், நடிப்பு, முதிர்ச்சி, பக்குவம் என அனைத்தையும் ஒருங்கே சேர்த்தது போல் திரையில் பவனி வருகிறார். வேர் பிடித்து மலை ஏறுவது, கோபத்தில் சிம்புவது, அழுவது, கத்துவது, வீராவுடன் தங்க சம்மதிப்பது என நன்றாக நடித்துள்ளார்.
பிருத்விராஜ். கடமையே கண் என இருக்கும் காவல்துறை உயரதிகாரி; மனைவி மீது மிகுந்த பிரியம் உள்ளவர் என்று கொடுத்த பாத்திரத்தில் நிறைவாய் பொருந்துகிறார். வீராவின் அண்ணன் சிங்கராசனாக பிரபு; வனத்துறை அதிகாரி ஞானபிரகாசமாக கார்த்திக்; வீராவின் தங்கை வெண்ணிலாவாக ப்ரியாமணி; சிங்கராசனின் மனைவி அன்னம் ஆக ரஞ்சிதா; அரவாணி ராசாத்தியாக வையாபுரி என பெரிய குழுவே படத்தில் உள்ளனர்.
ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன். படத்தில் வந்திருக்கும் இவர்களின் திறமை அல்லது உழைப்பு சொல்லியோ, எழுதியோ மாளாது. ஒரே காட்சியை பல கோணங்களில் கண்களுக்கு விருந்தளித்துள்ளனர். மலை, அருவி, பாறையில் நீளும் வேர், காடு, வீரா, ராகிணி, கூழாங்கல், துள்ளி வரும் நீரின் மத்தியில் இருக்கும் உடைந்த சுவாமி சிலை, தேவ் தங்கியிருக்கும் கூடாரம், அதில் தொங்கும் ராகிணியின் கிழிந்த உடை, தேவ் கையில் சுழலும் இரண்டு புகைப்படங்கள், பொசுங்கிய தினத்தந்தி நாளிதழ் துளைகளின் ஊடே தெரியும் தேவ்வின் கோபமான முகம் என ஒளிப்பதிவின் புகழ் பாடும் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த படத்தின் ஒளிப்பதிவு இன்னும் பல காலங்களுக்கு பேசப்படும். இவர்களுக்கு துணை ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு.
ஏ.ஆர்.ராஹ்மான் இசையில், "உசுரே போகுதே" பாடல் படம் வெளிவரும் முன்பே பலரை உருக வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் தொடங்கிய சில நிமிடங்களில் வரும் இந்த பாட்டை அதன் மன நிலையோடு ரசிக்க முடியவில்லை. பாடலின் ஊடே வசனங்கள் வேறு ஒலிக்கிறது. பிண்ணனி இசையும் படத்தோடு இணைந்து காட்சிகளை மேலும் வலுப்படுத்துகிறது.
மணிரத்னம். இந்திய அளவில் கொண்டாடப்படும் தமிழ் இயக்குனர்; தனக்கென உரிய பிரத்யேக பாணியில் திரைக்கதை வடிவமைப்பவர்; பல இயக்குனர்களின் ஆதர்சம்; ஒரு படமாவது இவர் இயக்கத்தில் நடித்து விட வேண்டுமென எண்ணாத நடிகர், நடிகையர்கள் தமிழ் நாட்டில் அரிது; தான் விரும்பியதை விரும்பியப்படி திரையில் கொண்டு வரும் வித்தை தெரிந்தவர் என பல புகழ்களுக்கு உரியவர். ஆனால் இந்த முறை படத்தில் அத்தனை இருந்தும் படத்தில் ஒரு குறை மட்டும் படம் ஆரம்பித்த நொடி முதல் தெரிகிறது. அது தெளிவற்ற திரைக்கதை. இந்தியா முழுவதிற்குமான படம் என்பதால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத சிக்கல்கள் சிலவும் படத்தில் தெரிகின்றன. இதுவரை அவர் படத்தில் இல்லாத புதுமையை இம்முறை புகுத்தியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் கதாபாத்திரங்கள் கத்துகின்றனர். இராவணன் என்ற தலைப்பை நியாயப்படுத்த பல வசனங்கள் வருகின்றன. சுஹாசினி மிக குறைவான இடங்களிலேயே வசனத்தில் பளீச்சிடுகிறார்.
ராவணன்- மிரட்டுகிறான் காரணமில்லாமல்.