"போர்க்களம்"- இருளாகி போன வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் சிக்கி, கட்டாயத்தால் கத்தி எடுப்பவனை பற்றிய படம்.
நாயகன் நல்லவன். முன்னோர்கள் வாழ்ந்த இந்தியாவில் வந்து குடியேற வேண்டுமென்ற தாயின் ஆசைக்கு இணங்க இந்தியா வருகிறான். தான் உண்டு தன் வாழ்க்கை உண்டு என்றிருக்கும் அவன் வாழ்வில் ஒரு பெண் நுழைந்து காதல் கொள்கிறாள். காதலை மறுக்கும் நாயகன், நாயகியை ரவுடிகளிடம் தெரியாத்தனமாக சிக்க வைத்து விடுகிறான். அதற்காக வருந்தும் நாயகனின் பதில் நடவடிக்கை தான் படத்தின் முடிவு.
கிஷோர். நாயகன் கர்ணாவாக நடித்திருக்கிறார் அல்லது மிரட்டியிருக்கிறார். சில காட்சிகளில் அவர் பேசுவது புரியவில்லை எனினும் அவரது உடல மொழி கன கச்சிதமாக எடுபடுகிறது. அதிகம் அலட்டிக் கொள்ளாத 'ஆக்ஷன் ஹீரோ'வாக வலம் வருகிறார். வில்லன், குணசித்திர நடிகன் போன்ற அந்தஸ்துக்களில் இருந்து நாயகனாக முன்னேறியிருப்பது அவரது திறமைக்கு கிடைத்த மகுடம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஸ்மிதா. கன்னடத்து வரவு. ஆனால் படத்தில் 'லங்கா' என்னும் ஆந்திர ஊரிலிருந்து ஓடி வரும் பெண்ணாக வருகிறார். பக்கத்து வீட்டு பெண் போல் இல்லை எனினும் எங்கயோ பார்த்த பக்கத்து ஊர் பெண் போல் இருக்கிறார். மிகையான ஒப்பனையோ மிகையான நடிப்போ இல்லாதது ஆறுதல் என்றால் ஆடை குறைப்பு இல்லாதது பெரும் புரட்சிக்கரமான ஆறுதல். சட்டென்று ஸ்மிதாவின் முகம் தமிழக ரசிகர்களுக்கு பதியாது. படத்தில் நிறைய காட்சிகள் இல்லாதது முக்கியமாக நாயகியின் முகத்தை நெருக்கத்தில் காட்டாதது காரணமாக இருக்கலாம்.
படத்தில் பஞ்சமே இல்லாதது நாயகனிடம் அடி வாங்க வரும் அடியாட்கள் எண்ணிக்கை தான். படத்தின் இறுதி காட்சிகளில் லாரியில் வந்து இறங்கும் அளவு அடியாட்கள் புழக்கம் படத்தில் அதிகம். குறைபாடுள்ள நாயகனுக்கு 'சூப்பர்' சுப்பராயன் அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகள் அருமையாக காட்சியமைக்கப் பட்டுள்ளது. அடியாட்களை வழி நடத்த வரும் முக்கிய வில்லனாக சம்பத் ராஜ் வருகிறார். வழக்கமான வில்லன் தான். சத்தம் போடுவது. பிறகு நாயகனால் போடப்படுவது. பொன்வண்ணன், சந்தான பாரதி, பிஜு மேனன் என இன்னும் பல பாத்திரங்கள் வந்து போகின்றனர்.
பண்டி சரோஜ்குமார். ஆந்திர வரவு இளம் இயக்குனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற நம்பிக்கையில் சென்னை வந்து 'ஃபிலிம் ஸ்கூலில்' படித்து 24 வயதில் இயக்குனர் ஆகியிருக்கிறார். 'ஆந்திராவை விட தமிழகத்தில் புது முயற்சிகளுக்கு வரவேற்பு அதிகம்' என தமிழ் ரசிகர்களை சிலாகித்து நம்பிக்கையோடு படம் இயற்றியுள்ளார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை தனது தொழில்நுட்ப ஆளுமையால் மிரட்டியுள்ளார். புதுமையான கேமிரா கோணங்களாலும், படம் முழுவதும் படர்ந்திருக்கும் கருமை நிறத்தாலும், கம்மியான ஒளியை மட்டுமே காட்சிகளில் விட்டு மற்ற படத்திலிருந்து தனது படத்தை மிகவும் வித்தியாசப்படுத்தியுள்ளார். நம்பிக்கை அளிக்கும் இயக்குனர்களில் தவிர்க்க முடியாத ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறர். நிதானமாய் போகும் படத்தில் தாய்லாந்தில் வாழ்ந்த நாயகனின் கடந்த காலம் சொல்லப்படும் இடத்தில் இருந்து படத்தின் மேலுள்ள ஈர்ப்பு இரட்டிப்பாகிறது. இவருக்கு உறுதுணையாக இருந்த மகேந்திரனின் ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்குனர் அனந்தனின் பங்களிப்பு. படம் தொடங்கும் பொழுது பாத்திரங்களை சுழல ஆரம்பிக்கும் கேமிரா இறுதி வரை தொடர்கிறது. முதல் காட்சி தொடங்கி கடைசி காட்சி வரை நுணுக்கமாக கலைக்கு பிரத்யேக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூனியக்காரன் போல் வருபவரின் கையில் இருக்கும் ஆட்டு தலை வடிவம் கொண்ட தடி, நாயகன் வீட்டு மரத்தில் செதுக்கியது போல் இருக்கும் உலோக தலை, இறுதி காட்சிகளில் போர்க்களம் போல் காட்சியளிக்கும் இடம், உபயோகப்படுத்தப்படும் ஆயுதங்கள் என படம் நெடுகிலும் அவர்களது கலைக்கான மெனக்கெடல் தொடர்கிறது. ரோஹித் குல்கர்னியின் இசையும், அருணின் படத்தொகுப்பும் கூடுதல் பலம்.
தற்கொலை புரியும் ஒருவனைப் பற்றி நேரடி செய்தியாக சொல்லி விட்டு, அவர் தற்கொலை செய்துக் கொள்வார் என நினைத்தால் 'ஏ' என அழுத்தி அல்லது தற்கொலை செய்துக் கொள்ள மாட்டார் என நினைத்தால் 'பி' என அழுத்தி குறுஞ்செய்தி அனுப்ப சொல்லும் தொகுப்பாளினி மூலம் இயக்குனர் கையாண்டுள்ள பகடி ரசிக்க வைக்கிறது. இதே போல் படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுகிறது. நகைச்சுவை கதாபாத்திரம் என்று சொல்வதற்கு சத்யன் உள்ளார். நிறைய பேசுகிறார். அதற்கு நறுக்கென சொல்லும் நாயகனின் அதட்டல்கள் ரசிக்கும்படி உள்ளது. ஓடிக் கொண்டே இருக்கும் பைத்தியக்காரன் ஒருவன் மூலம் தூது விடும் நாயகிக்கு அந்த பைத்தியத்தின் மூலமே பதில் சொல்கிறார் நாயகன். அடுத்த நாள் அந்த பைத்தியத்தின் பின்னால் மூச்சிறைக்க பைத்தியம் போல் ஊர் முழுக்க ஓடுகிறார்கள் வில்லனின் குண்டர்கள்.
முதல் படத்திலேயே மிரட்டி இருக்கும் இளம் இயக்குனரின் இத்தகைய முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. போர்க்களம் அதகளப்படுகிறது என்பதே மிகையற்ற நிதர்சனம்.