ஆயிரத்தில் ஒருவன்

"ஆயிரத்தில் ஒருவன்" - தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது பேர்களால் சாதிக்க இயலாத செயற்கரிய செயல்களை செய்து முடிக்கும் ஒருவனை குறிக்கும் பாராட்டு சொற்கள். படத்தின் பெயரைக் கொண்டு அத்தகைய ஒருவனை பற்றிய கதை என ஒருவாறு யூகிக்கலாம். ஆனால் யூகங்கள் சில சமயம் பிசக்கி விடுவது உண்டு. சொந்த நாடு திரும்பும் ஆசையில் ஆயிரம் வருடங்களாக ஒரு தீவில் பதுங்கியிருக்கும் சோழர்களும், ஆயிரம் வருடங்களுக்கு முன் களவு போன குல தெய்வ சிலையை மீட்க துடிக்கும் பாண்டியர்களும் அவர் அவர்களது லட்சியங்களை அடைந்தனரா என்ற கேள்விக்கான பதில் தான் இப்படத்தின் ஒரு வரி கதை.

ஆயிரம் வருடங்களுக்கு முன் சோழ நாட்டை விட்டு சென்ற சோழ இளவரசனின் இருப்பிடத்தை தேடி செல்லும் தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் காணாமல் போகிறார். அவரைத் தேடி அனிதா என்னும் பெண்ணின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர். தொல்பொருள் ஆய்வாளனியான தொலைந்தவரின் மகள் துணையோடு அக்குழு வியட்நாமில் உள்ள ஒரு தீவுக்கு பயணிக்கின்றனர். கடும் ஆபத்தை சந்திக்கும் அவர்களின் குழுவில் இருந்து, அனிதா தொல்பொருள் ஆய்வாளனி மற்றும் அவர்களுக்கு உதவியாக வரும் எடுபடி நாயகன் மூவரும் பிரிகின்றனர். சற்றும் எதிர்பாராத வகையில் பதுங்கியிருக்கும் சோழர்களிடம் அம்மூவரும் மாட்டிக் கொள்கின்றனர். அவர்களை சோழர்கள் பலி கொடுக்கும் சமயத்தில் அனிதா தன்னை சோழ நாட்டில் இருந்து வரும் தூதுவளாக அடையாளப்படுத்துகிறாள். தங்கள் கனவு நிறைவேறப் போகும் ஆசையில் சோழர்கள் குதூகலிக்கின்றனர். ஆனால் பாண்டிய பரம்பரையை சேர்ந்தவளான அனிதா, சோழர்களை பழி தீர்த்து தங்களது குல தெய்வ சிலையை மீட்க தக்க தருணம் வந்ததென மகிழ்கிறாள். சோழர்கள் குதூகலித்தனரா அல்லது பாண்டியர்கள் மகிழ்ந்தனரா என்பது தான் முடிவு.

கார்த்தி. கண்டிப்பாக மச்சம் இருக்கும். 'பருத்தி வீரன்' என்ற பிரமாண்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு கலக்கல். இயக்குனர் செல்வ ராகவனின் படங்களில் இருந்து எதிர்பார்க்கப்படும் நாயகனுக்குரிய சகல குணாதிசயங்களோடு வலம் வரும் பாத்திரத்தில் வருகிறார் கார்த்தி. இடைவேளை வரும் வரை படத்தில் கார்த்தி படம் பார்ப்பவர்களின் மூளையை ஆக்கிரமித்துக் கொள்கிறார். அவர் எது செய்தாலும் ரசிக்கும் படி உள்ளது. கார்த்தி பின்னால் உருவமற்று நிற்கும் இயக்குனர் இவ்விடங்களில் தெளிவாக தெரிகிறார். பயமற்ற எள்ளல் நடை, எகத்தாள பேச்சு, பயப்படுவது, உருகுவது, கோபப்படுவது என கார்த்தி முதல் பாதியின் விறுவிறுப்பிற்கு பெரிதும் பலம் செய்கிறார். இரண்டாம் பாதியில் பொலிவிழுக்கும் கார்த்தி, ஒரு கட்டத்தில் எழுச்சி பெறுகிறார். அவ்வெழுச்சி முதல் பாக விறுவிறுப்பை மீண்டும் ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்குள் படம் முடிந்து விடுகிறது.

ரீமா சென். அவரது வாழ்நாள் பாத்திரமாக இப்படம் அமைய நிறைய வாய்ப்புள்ளது. மலரவிருக்கும் பூ போல் மென்மையாக திரையில் தோன்றுகிறார். மெல்ல தனது ஆளுமையை திரையில் அவிழ்க்கிறார். பொதுவாக ஒரு தமிழ் படத்தில் நாயகன் செய்யும் அனைத்து வேலையையும் முதல் பாதியில் செவ்வென செய்கிறார். எதற்கும் அசராமல் கொலை வெறியுடன் ஓடி வரும் காட்டு வாசிகளை அநாசயமாக இரண்டு கைகளிலும் துப்பாக்கி பிடித்தவாறு சுடும் பொழுதும் அழகாக தெரிகிறார். ஒரு மெல்லிய அலட்சிய புன்னகை முகத்தில் தவழ்ந்த வண்ணமே உள்ளது. இரண்டாம் பாதி தொடங்கி படம் முடியும் வரை பாய தயாராயிருக்கும் புலியை போலவே உள்ளார் அனிதா பாண்டியனாக நடித்திருக்கும் ரீமா சென். வீர பாண்டியச்சிகள் இப்படி தான் இருந்திருப்பார்கள் என்பதற்கான பிரதி பிம்பமாய் திகழ்கிறார். ரீமாவின் அழகை, நடிப்பை மற்றும் அவர் சம்பந்தமான அனைத்தையும் மிக நேர்த்தியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். 'ஆயிரத்தில் ஒருத்தி' என்ற தலைப்பு இப்படத்திற்கு மிக பொருத்தமானதாய் இருந்திருக்கும். ஆனால் 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற தலைப்பின் கவர்ச்சி வந்திருக்காது.

ஆன்ட்ரியா. அழகாய் தெரிகிறார். அமைதி சொருபமாய் வரும் ஆய்வாளனி. படம் நெடுக்க வந்தாலும் படத்தின் முதல் பாதியோடு இவரது பங்களிப்பு முடிகிறது. இரண்டாம் பாதியில் மூன்று இடங்களில் மட்டுமே தலை காட்டுகிறார். முதல் பாதியை பொறுத்தவரை கார்த்தி, ரீமா, ஆன்ட்ரியா என மூவருமே சமமாக பிண்ணி பிணைந்து கலக்கியுள்ளனர்.

பார்த்திபன். அவரது கண்கள் பேசுகிறது. சோழ மன்னன் என்ற சிலை ஒன்று உயிர் பெற்று எழுந்துள்ளது போல் உள்ளார். அவர் ஆடும் பொழுதும் மட்டும் சற்று சிரிக்க தோன்றுகிறது. சுற்றி இருக்கும் அனைவரும் தோட்டாக்களுக்கு பலியாகி இறக்கும் பொழுது, 'நாங்கள் பயந்து விடுவோம் என நினைத்தீரா?' என்று கார்த்தியை கேட்டு சிரிக்கும் பொழுதும், அவரது கண் முன்னால் அவரது மனைவி அவமானப்படுவதை பார்த்து கலங்குவதும், முடிவில் தனக்கு சோழக் களங்கள் உதவிக்கு வருமென ஏக்கப்படும் பொழுதும் பார்த்திபன் இமயமாய் மனதில் படர்கிறார்.

செல்வ ராகவன். தலையில் தூக்கி கொண்டாடப் பட வேண்டியவர். 'இது தான் கதை.. இப்படி தான் படம்' என்பதை மாற்றும் முன்னோடி இயக்குனர்களில் ஒருவர் என்பதை தனது 'புதுப்பேட்டை' படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் நிருபித்துள்ளார். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம் என்ற பிரபலமான விதிமுறை பொய்த்து போகுமாறான முயற்சி அவரது முந்தைய படம். அதே போல் விதிமீறல்கள் இப்படத்திலும் தொடர்கின்றன. நாயகனையே சுற்றி சுற்றி வரும் படங்களின் நடுவில் நாயகன் நாயகி என நம்பப்படும் இருவரின் பங்களிப்பை துண்டித்து கதையின் போக்கிலேயே படத்தை நகர்த்துவது புதுமை. முதல் பாதியில் அடிக்கடி தெரிந்த இயக்குனர், இரண்டாம் பாதியில் அவரது திரைக்கதியில் அவரே தொலைந்துப் போகிறார் போல. தனது உழைப்பில் தானே கரையும் பேரானந்த அனுபவமாக இருந்திருக்கும் அவருக்கு. இரண்டாம் பாதியில் காட்டப்படும் உலகமே வேறு. காட்சிகளின் நீளம் அதிகமாக தெரிகிறது. அதிக துணை நடிகர்கள் நடித்திருக்கும் படம் என்ற பெருமையும் இதற்கு காரணமாக இருக்கலாம். அந்த கூட்டத்தின் நடை, உடை, மொழி என அனைத்தையும் மாற்றி நடிக்க வைத்திருப்பது என்பது முடி கொண்டு மலை இழுக்கும் சமாச்சாரம். 'க்ளாடியேட்டர்' படத்தில் வருவது போல சண்டைக் காட்சியில், கார்த்தி என்ற சாமான்ய மனிதனின் ஆயிரத்தில் ஒருவனாகும் விழிப்பு நிலையை பதிவு செய்துள்ளார். அந்த விழிப்பின் எழுச்சி தொடரும் என்று ரசிகர்கள் நினைக்கையில், இயக்குனர் அதற்கான காட்சிகள் எதுவும் வைக்காமல் மீண்டும் கதையின் போக்கிற்கு ரசிகர்களை திருப்புகிறார். நாயகனின் சாகசங்களையே விரும்பும் ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக இருக்கலாம். கார்த்தியின் கதாபாத்திரத்தை பொறுத்தவரை அவரது உயிருக்கு இன்னல்கள் நேரும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு வகையில் தப்பி பிழைக்கிறார் அல்லது அவருக்காக மற்றவர்கள் உயிரைக் கொடுக்கின்றனர். சோழர்களின் தீர்க்க தரிசனம் மெய்ப்பட, கார்த்தி உயிரோடிருத்தல் அவசியமாகிறது. சோழராவது, பாண்டியராவது என முகம் இளித்து, இப்ப பசிக்கு என்ன வழி என்று யோசிக்கும் கார்த்தி சோழர்களின் மந்திரி அந்தஸ்திற்கு உயர்ந்து சோழ பெருமை அழிந்து விடாமல் இருக்க காரணம் ஆகிறார். அதனால் அவர் ஆயிரத்தில் ஒருவன் என்பது இயக்குனருக்கு தெரியும் ஆனால் ரசிகர்களுக்கும் அது புரியுமா என இயக்குனர் கவலைப் படவில்லை.

கலைகளிலோ காப்பியங்களிலோ இலை மறை காய் மறைவாக அவை இயற்றப்படும் காலத்து வரலாற்று வன்முறைகளை பதித்து விடுவது உண்டு. அதே போல் இப்படத்திலும் சோழருக்கும், தற்கால இராணுவத்தினருக்கும் நடக்கும் யுத்தமும், அதை தொடர்ந்து சிறை கைதிகளாக சிக்கிய சோழர்களிடம் குறிப்பாக பெண்களிடம் கட்டவிழ்க்கப்படும் ஆபாசங்களை பதித்திருப்பதை சொல்லலாம். உணவு வேண்டி முலையில் இருந்து பீய்ச்சடிக்கப்படும் பெண்ணின் குருதியின் மூலமாக வறுமையின் கோரத்தை உணர்த்துவதும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட தமிழை உபயோகப்படுத்தி இருப்பதும், அரண்மனைமனை அனிதா பாண்டியனின் சிறுநீர் கொண்டு அவரது கன்னித்தன்மையை பரிசோதிப்பதை காட்சிப்படுத்தி இருப்பதும் படத்தில் இருக்கும் பொக்கிஷ காட்சிகளில் சில.

சோழர் காலத்தை கண் முன் கொண்டு வருகிறார்கள் கலை இயக்குனர் சந்தானமும், உடை வடிவமைப்பாளர் இரும் அலியும். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை படத்தின் மற்றொரு பலம். வசனங்கள் அற்ற நீளக் காட்சிகளில் அவரது இசை பேசுகிறது. பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது. ஆனால் பிண்ணனி இசை கதை சொல்லும் பாங்கிற்கு இல்லை எனினும் ரசித்து மயிர்க்கூச்செரியும்படி உள்ளது.

படத்தின் முதல் பாதி தேடல் ஆக உள்ளது. காட்சிகளில் விரியும் காடும், ஆபத்துகளும், சாகசங்களும் நம்மை படத்தில் இழுத்துக் கொள்கிறது. ஒளிப்பதிவாளர் ராம்ஜி தனது கேமிராவின் துணைக் கொண்டு அவ்வற்புதத்தை நடத்தியுள்ளார். இரண்டாம் பாதி இரண்டு இனங்களின் ஆயிரம் வருட ஏக்கங்களின் விழைவால் நடக்கும் போராட்டமாக உள்ளது. அதில் சம கால அரசியலையும் பதிந்து விட்டார் இயக்குனர். சில கேள்விகள் மனதில் எழுந்தாலும் அவற்றை கேட்க தோன்றாத அளவு படம் பார்ப்பவர்களை பிரமிக்க செய்து விடும்.

"ஆயிரத்தில் ஒருவன்" என்ற படம் பலமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டே வெளியானது. அதை இயக்குனர் பூர்த்தி செய்தாரா என்பது சந்தேகம் தான். ஏனெனில் படம் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விட்டது. அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது மீண்டும் சந்தேகம் தான். மக்கள் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை எனினும் ஏற்றுக் கொண்ட வரை படம் தனக்கான ஒரு தனி இடத்தையும் பெரும்புகழையும் அடைந்தே தீரும். படக் குழுவினரின் உழைப்பு அதற்கான சலுகைகளை பெற்றே தீரும் முக்கியமாக இதில் இயக்குனர் அடங்குவார். தமிழ் சினிமாவில் இத்தகைய முயற்சி ஒரு மைல்கல் என்பது மிகையற்ற நிதர்சனம்.


ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 592
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
karthi பதிந்த நேரம் :22-01-2010 17:22:12
vimarsanathai parthathum parkavendum pol ullathu indru paarkkapogiren
நாடோடி மன்னன் பதிந்த நேரம் :20-01-2010 18:59:03
அடடா.. 'அதோ அந்த பறவை போல...' பாட்டில் வாத்யார் என்ன அருமையா இருக்கிறாரு!! ;-)
ragu பதிந்த நேரம் :18-01-2010 23:27:55
ippadiyum oru padam edukalaam.. eduka mudium nu kaati irukiraar selva raagavan.. enaal ippadium nadika mudiyum nu kaati irukiraar reema sen ... oru vithyaasamaana muyarchi ... nalla muyarchiyum kooda.. vaazhthukkal ...
diva பதிந்த நேரம் :18-01-2010 19:46:34
excellent film in tamil. hats off to the director.

This is best review so for i have seen in web.

Good Work ithuTamil Team.
சே.ராஜப்ரியன் பதிந்த நேரம் :18-01-2010 14:05:09
நல்ல முயற்சி வாழ்த்துகள் திரு.செல்வராகவன் ... உழைப்பு என்றுமே வீணாவதில்லை, அது எப்பொழுதாவது வெளிப்படும் அந்த வகையில் பின் வரும் படைப்புகளுக்கு இது பொருந்தும் . நன்றி- இதுதமிழ் குழுவிற்கு,நல்ல நேர்மையான அலசல் ...
கேபிள் சஙக்ர் பதிந்த நேரம் :18-01-2010 00:49:16
எனக்கு படம் பிடிக்கவில்லை. முக்கியமாக இரண்டாவது பாதியினால்..