"குட்டிப் பிசாசு"- இராம நாராயணன் கதை, திரைக்கதை, வசனம், பாடல் என சகலத்தையும் எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.
ஒரு ஊரில் ஒரு கிணறு. அந்த கிணறில் ஊரையே காவல் காக்கும் கிணத்தடி காளி. அதிக சக்திகள் பெற மந்திரமூர்த்தி என்ற மந்திரவாதி அந்த ஊரை சேர்ந்த பெண்ணை எரிப்பதுடன், அந்தப் பெண்ணின் அண்ணன் ஆவியை ஒரு பழைய காலத்து மஞ்சள் நிற காரில் அடைத்து விடுகிறான். ஐந்து வருடங்களுக்கு பிறகு காருக்குள் இருக்கும் ஆவியை கிணத்தடி காளி விடுவிக்க, அந்த அண்ணன் ஆவி தங்கையின் ஆவியுடன் சேர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பழி வாங்கியதா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
பேபி கீர்த்திகா அறிமுக குழந்தை நட்சத்திர நாயகியாக. பாடிக் கொண்டே நன்றாக ஆடுகிறார். முறைக்கிறார். இறந்த பெண்ணின் ஆவி கீர்த்திகாவின் உள் நுழைவதால்.. இவரே படத்தில் 'குட்டிப் பிசாசு'.
சங்கீதா. ஆவிப் புகும் குழந்தையின் தாய் கதாபாத்திரத்தில் ஐயர் வீட்டி மாமியாக வேடம் கட்டியுள்ளார். இவரது கணவனாக ராம்ஜியும், தந்தையாக டெல்லி கனேஷும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் படத்தின் கலகலப்பிற்கு மிக சிறியளவில் உதவுகின்றனர்.
காவேரி. சமுத்திரம் படத்தில் சரத்குமார் உட்பட மூவருக்கு தங்கையாக நடித்தவரை இப்படத்தில் கஞ்சா கருப்புவிற்கு மட்டும் தங்கையாக நடிக்க வைத்து பாசமலர் இரண்டாம் பாகத்திற்கு முயன்றுள்ளார் இயக்குனர். இவர்கள் பாசத்தை வெளிக்காட்ட ஒரு வெளிமாநிலத்தில் எடுக்கப்பட்ட பாட்டும் உள்ளது. கஞ்சா கருப்புவை விட அவரது குரல் மட்டும் கார் பேசுவதாக பல இடங்களில் வருகிறது. காவேரியின் முறை மாமனாக வரும் 'ரியஸ்கான் வழக்கமான வில்லத்தனங்களை மந்திரவாதி ஒருவனோடு செய்கிறார்.
காதல் தண்டபாணி. மந்திரவாதியின் குரு 'குடுகுடுப்பு குள்ளமுனி'யாக வருகிறார். குட்டிப் பிசாசை விரட்ட குட்டிச் சாத்தானாக மாறி சில வித்தையெல்லாம் செய்கிறார். கெளரவத் தோற்றத்தில் நாசர். இருநூறு வருடங்களுக்கு முன்பான 'ப்ளாஷ்-பேக்கில் பரங்கி தலையராக வந்து கிணத்தடி காளியின் மகிமையை உணர்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் கிணத்தடி காளியாக. ஆவிகளுக்கு உதவி புரிகிறார். அடிக்கடி தோன்றி சிரிப்பார். கெட்டவர்களை பார்த்தால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி முறைப்பார். படத்தின் இறுதி காட்சிகளுக்கு முன் கோபமாக நடனமாடுகிறார். கடைசிக் காட்சியில் மனம் குளிர்ந்து அருள் பாலிக்கிறார்.
படத்தில் வரும் அந்த பழங்காலத்து மஞ்சள் நிற கார் மனிதனாக உருமாறி நடக்கிறது, கர்ஜிக்கிறது. ஒரு பாட்டிற்கு நன்றாக நடனமும் செய்கிறது. படத்தில் சில இடங்களில் 'கிராஃபிக்ஸ் வேலைப்பாடுகள் நன்றாக இருந்தாலும் அதற்கு துணை செய்யும்படியான படக் காட்சிகளும், அதற்கு தோதான கதையும் இல்லாதது கிராஃபிக்சின் தரத்தை குறைத்துக் காட்டுகிறது. ஈ.எஃப்.எக்ஸ். லேப்பின் முயற்சி நம்பிக்கையை தோற்றுவிக்கிறது. சிறையில் இருக்கும் ரியஸ்கானை மந்திரமூர்த்தி தப்பிக்க வைக்கும் காட்சிய் அதற்கொரு உதாரணம்.
இந்தப் படத்தின் மூலம் கிராஃபிக்சில் புரட்சி செய்ததாக சொல்லிக் கொள்ளும் இயக்குனர் கதையில் குறைந்தபட்ச மாற்றத்தினையாவது கொண்டு வந்திருக்கலாம்.