"மதராசபட்டினம்"- சுதந்திர போராட்டக் காலம், மல்லர்கள், அறுபத்தைந்து வருட பிந்தைய சென்னை போன்றவைகள் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற செய்தவைகள்.
1945 ஆம் ஆண்டு மதராசபட்டினம் வரும் ஆளுநரின் மகள் ஏமி வில்கின்சன், சலவைத் தொழிலாளியான பரிதி மீது காதல் கொள்கிறாள். இந்தியன் ஒருவனை தன் மகள் மணப்பதை விரும்பாத மெட்ராசின் கடைசி ஆங்கிலேய ஆளுநர் அவர்களை பிரித்து விடுகிறார். பரிதியிடமிருந்து பெற்ற அவன் தாயின் தாலியை திருப்பி தர, முதுமை வயதில் கணவன் இறந்தவுடன் மீண்டும் இந்தியா வருகிறார் ஏமி. பரிதியை பார்த்து ஏமி தாலியை ஒப்படைத்தாரா என்பதுடன் படம் நிறைவுறுகிறது.
ஆர்யா பரிதியாக. அவரது அறிமுக காட்சி அசத்தல். குஸ்தி பழகும் சலவைத் தொழிலாளியென காட்டப்பட்டு தன்னுள் மெல்ல மலரும் காதலை உணர்ந்து அதற்காக போராடும் பாரம்பரிய தமிழ்ப்பட நாயகனாக தோள்கள் புடைக்க வலம் வருகிறார். படகில் ஏமி எதிரில் தனியாக அமர்ந்து இருக்கும் பொழுதும், காவல்துறை ஆணையருடன் ஒன்டிக்கு ஒன்டி சன்டைப் போடும் பொழுதும் கிடைத்த வாய்ப்பினை மிகையாக பயன்படுத்தாமல் சிக்கனமாய நடித்து அசத்துகிறார். 'நான் கடவுள்' போல ஆர்யாவிற்கு இப்படமும் ஒரு மைல் கல்லே!
ஏமி வில்கின்சனாக ஏமி ஜாக்சன். பார்த்தவுடன் மனதில் பதியும் அந்நிய முகம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஓர் தமிழ்ப்படம். தமிழ்ப்படங்களில் நடிக்கும் மற்ற இந்திய நாயகிகளுக்கு கிடைக்காத இந்த வாய்ப்பினை அற்புதமாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்.
நேதாஜி உயிருடன் தான் உள்ளார் என நம்பும் குஸ்தி வாத்தியாராக நாசர். புகைப்படக்கருவி முன் அனைத்தையும் மறந்து சிலையாக காட்சி அளிக்கும் மொழிபெயர்ப்பாளாராக கொச்சின் ஹனீஃபா. இந்தியர்கள் மீது வெறுப்பை உமிழும் ராபர்ட் எல்லீஸ் என்ற காவல்துறை ஆணையராக அலெக்ஸ் ஓ'னெல் என்னும் வெள்ளையர் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ஆர்யாவின் நண்பர்கள், வெள்ளைக்கார ஆளுநர் என நடித்துள்ள அனைவருமே தனது பங்கினை படத்தில் முழுமையாக வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் முதிய வயது ஏமி வில்கின்சனாக நடிக்கும் மூதாட்டி, தமது அமைதியான பாவனைகளிலேயே மனதை கணக்க செய்து விடுகிறார்.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் பழைய சென்னையும், புதிய சென்னையும் ஒன்றாக மிளிர்கிறது. ஆன்டனியின் படத்தொகுப்பில் படம் முன்னும், பின்னும் குழப்பாமல் அழகாக பயணிக்கிறது. படத்தின் பெரிய பலம் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ். பாடல்களும், பிண்ணனி இசையும் கண்டிப்பாக படம் பார்க்கும் பொழுதும், பார்த்த பின்பும் கவனத்தை ஈர்க்கும்.
எழுதி, இயக்கி இருப்பவர் க்ரீடம் படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய். ஆங்காங்கே பல சுவாரஸ்யமான காட்சிகளை வைத்துள்ளார். விமானம் பறக்கும் ஒலி கேட்கும் பொழுதெல்லாம் 'குண்டு போட போறாங்க.. குண்டு போட போறாங்க..' என கத்துபவன், எதற்கும் அசராமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவன், சுற்றுலாவிற்கு வரும் வெளிநாட்டினரை அமெரிக்கன் என கூறும் வாடகை மகிழுந்து ஓட்டுபவன், வெள்ளையர்களிடம் பணம் பிடுங்கிக் கொண்டே இருப்பவன் என ஒவ்வொரு பாத்திர தேர்வையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். ஆர்யா நாயகியிடம் ஆங்கிலத்தில் பேச மனனம் செய்துக் கொண்டு வந்ததை தன் விரல்களில் இருந்து தோண்டி எடுக்க முற்படும் பொழுது, 'என்ன மறந்துட்டியா?' என நாயகி கேட்கும் காட்சி அருமை. அதனைத் தொடர்ந்து வரும் இசையும், 'பூக்கள் பூக்கும்..' எனத் தொடங்கும் பாடலும் அழகாக பொருந்தியுள்ளது. ஆனால் மேலோட்டமாக பார்த்தால் படத்தின் கதை 'டைட்டானிக்' படக் கதையை நினைவுறுத்துகிறது. ஆளுநர் கையெழுத்திட்ட ஆணையை ஒன்டிக்கு ஒன்டி போட்டியில் வென்றால் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று காவல்துறை ஆணையர் சொல்வது ஏற்புடையதாக இல்லை. அந்த காட்சி மேலும் 'லகான்' படத்தை நினைவுறுத்துகிறது. தோட்டாவில் இருந்து தப்பிக்க நாயகன் ஓடும் விதம் 'அபோகலிப்டோ' படத்தினை நினைவுறுத்துகிறது. கடைசிக் காட்சியிற்கு முன்பாக வரும் சென்னை சென்ட்ரலை மையமாக கொண்டு வரும் காட்சி சற்றே நீளமாயுள்ளது.
சுதந்திர போராட்டக் காலம், மல்லர்கள், அறுபத்தைந்து வருட பிந்தைய சென்னை போன்றவைகள் வைத்து வித்தியாசமான கதை ஒன்றை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். நமக்கு பழக்கப்பட்ட, பார்த்துப் புளித்துப் போன காதலன் படக் கதையையே வேறு காலத்தில் நடப்பதாக காட்டியுள்ளனர். அந்த வேறு காலத்தையும், அந்த காலத்திற்கான சென்னையையும்.. பார்ப்பவர்களின் கண் முன் கொண்டு வந்துள்ளனர். அதை சாத்தியப்படுத்திய அவர்களின் உழைப்பு பிரமிப்பையே ஏற்படுத்தும்.
தெள்ளிய கூவம் நதி மேல் ஓர் நெகிழ்வான காதல்.