"அங்காடித் தெரு"- நெஞ்சை கணக்க செய்த 'வெயில்' திரைப்படத்திற்கு பிறகு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவாறு வெளி வந்திருக்கும் இயக்குனர் வசந்தபாலனின் படம்.
குடும்ப சூழ்நிலை பிடித்துத் தள்ள சென்னையில் ஒரு பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலைக்கு வந்து சேர்கிறான் நாயகன். சென்னை என்ற சொல்லைக் கேட்டதும் ஏற்படும் கவர்ச்சிக்கு நேர்மாறாக வேலையிடம் இருப்பதை கண்டு நாயகன் அதிர்ந்தாலும் குடும்பத்திற்கான பண தேவை மேலும் அவனை யோசிக்கவிடாமல் தடுக்கிறது . துடுக்கான நாயகியுடனான மோதல் எப்பொழுதும் போல் காதலிலேயெ முடிகிறது. பணமே பிரதானம் என எண்ணும் முதலாளி நியமித்த மேற்பார்வையாளர் தனக்கு கீழ் இருக்கும் ஊழியர்களை வேண்டாத பொண்டாட்டி போல் எதற்கெடுத்தாலும் வதைக்கிறார். ஆண் என்றால் அடி உதைகளாகவும், பெண் என்றால் உதையோடு பாலியல் சில்மிஷமாகவும் அவரது வதை குரூரமானதாய் இருக்கிறது. இத்தகைய மோசமான மூச்சு முட்டும் சூழலில் ஏற்படும் மன சிக்கல்கள், ஊடல், குடும்ப சூழல் நினைவு, இதர பிரச்சனைகள் என சகல அலைக்கழித்தல்களையும் மீறி அவர்கள் காதல் கைக்கூடியதா என்பதுடன் நிறைவுறுகிறது படம்.
மகேஷ். அறிமுக நாயகன் என சொல்ல முடியாத அளவு சிறப்பான நடிப்பாய் வெளிப்படுத்தியுள்ளார். நாயகனை சுற்றி படம் போவது போலிருந்தாலும், படத்தின் சுழற்சி களம் கதையே. 'லிங்' என்ற ஜோதிலிங்கமாக நாயக தன்மையற்ற பாத்திரத்தில் நடித்த போதிலும், கதையின் போக்கு அவரை திரையரங்கு விட்டு வெளி வரும் பொழுது படம் பார்த்தவர்களின் நினைவோடு நாயகனையும் அனுப்பி வைக்கிறது.
அஞ்சலி கதாநாயகியாக. கதைக்களம் உள்ள படம் பெரும்பாலும் மிக மெதுவாக சென்று கழுத்தறுக்கும் என்பது பொதுவான அபிப்ராயம். அந்த கருத்தை தனது துடுக்கான பாவனை, செய்கை, பேச்சு என சகல விதத்திலும் அருமையான நடிப்பால் பொய்க்க செய்கிறார் 'கனி' என்னும் பாத்திரத்தில் வரும் நாயகி. 'கற்றது தமிழ்' படத்தில் அறிமுகமான அவரது காத்திருப்புக்கு நல்லதொரு பயனை கொடுத்திருக்கிறது இப்படம்.
பாண்டி. விஜய் டி.வி.யின் பிரபல தொடரில் பரீச்சயமானவர். நாயகனின் நண்பன் மாரிமுத்துவாக வந்து படத்தின் நகைச்சுவைக்கு உதவி செய்கிறார். செளரி முடி வாங்கிக் கொடுத்தும், ஒன்பதாம் வகுப்பு கடவுள் வாழ்த்துப் பாடலில் திருத்தம் செய்து கவிதையாக மாற்றியும் காதலை சொல்லத் துடிக்கிறார். ஏற்கனவே பல படங்களில் தலைக் காட்டி இருந்தாலும் இந்த படம் அவருக்கு கிடைத்திருப்பது அற்புதமானதொரு வாய்ப்பு. அதை முறையாக பயன்படுத்தி உள்ளார்.
பழ. கருப்பையா. 'அண்ணாச்சி' என்ற பாத்திரத்தில் அநாசயமாக அசத்தியுள்ளார். வியாபாரம் பாதிக்கிறதே என அவர் காட்டும் எரிச்சலாகட்டும், 'தினப்படி' என்று வரிசைக் கிரமமாக ஒவ்வொரு வாரியத்திற்கும் பஞ்சப்படி அல்லது லஞ்சப்படி கொடுப்பதை வயிற்றெரிச்சலுடன் குறிப்பிடுவதாகட்டும், விளம்பரம் எடுக்க வரும் இயக்குனரிடம் விவாதிப்பதாகட்டும் அவர் கதாப்பாத்திரம் ஆகவே மாறியுள்ளார். கருங்காளியாக வரும் மேற்பார்வையாளர் பாத்திரத்தில் மிரட்டியுள்ளார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். சிநேகா நடிகை சிநேகாவாகவே சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார்.
"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை... " எனத் தொடங்கும் பாடல் பண்பலையில் கேட்காத நாளில்லை. அந்த அளவுக்கு படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை கூட்டும் காரணிகளில் பாடல்களும் முக்கிய காரணம். இசை விஜய் ஆன்டனி மற்றும் ஜீ.வி.பிரகாஷ் குமார். வசனங்கள், காட்சிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை பிண்ணனி இசை ஏற்படுத்தவில்லை. படத்தின் ஒளி அமைப்பில் உள்ள நுணக்கத்திற்கு காரணம் ரிச்சர்ட் மரிய நாதன்.
இரண்டு மூன்று இடங்களில் திரையரங்கில் கைத்தட்டல் எழுகின்றது. காரணம் வசனங்கள். முக்கியமாக மாற்று திறனாளரின் மனைவி பேசும் இடம் குறிப்பிடத்தக்கது. திரையரங்கில் கைத்தட்டல் சாதாரணமான நிகழ்ச்சி எனினும் பெரிய நாயகர்கள் இல்லாத; சண்டைக் காட்சிகள் இல்லாத; எதார்த்தமாய் நகரும் படத்திற்கு இத்தகைய அங்கீகாரம் கிடைப்பது தமிழ்ப் பட சூழலுக்கு ஆரோக்யமான அம்சம். இதற்கு பின்னாலிருக்கும் காரணகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன். 'நான் கடவுள்' படத்திற்கும் இவர் தான் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த பாலன். திரையரங்கிற்கு வந்தவர்களை ஆச்சரியமூட்டி கலக்கியுள்ளார். 'வெயில்' படம் மூலமாக இவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமும், பிம்பமும் கண்டிப்பாக இரட்டிப்பாகும். 'நல்ல படம் எடுக்க நான் தயார். மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?' என சப்பைக் கட்டு கட்டும் அரை வேக்காடு இயக்குனர்கள் வாயில் மண்ணை வாரி போட்டு விட்டார். தொழில்நுட்பத்தை நேர்த்தியாக உபயோகிப்பதோடு நல்ல கதையும் இருக்க வேண்டுமென நினைப்பவர் வசந்த பாலன். அந்த நினைப்பின் பலம் காரணமாய் பலன் பெற்றிருப்பது தமிழ்ப்பட ரசிகர்கள். அங்காடித் தெருவில் இருக்கக் கூடிய மனிதர்கள் யாவரையும் பாத்திரமாக மாற்றி திரையில் உலவ விட்டுள்ளார். அனைவருக்கும் ஒரு வாழ்க்கை அதில் பல போராட்டங்கள். அதை மிகவும் நேர்மறையான நோக்கில் அளித்துள்ளார் படத்தில். 'உனது வயிற்றுக்கு நீ உழைத்தே ஆக வேண்டும். மற்றவர்களை நொந்து பயனில்லை. உழைத்தால் வாழலாம்' போன்ற கருத்துக்களை படம் பூடகமாய் சுமந்து வருகிறது. பசியோடு அங்காடித் தெருவுக்குள் நுழைபவன் இரண்டு குடம் தண்ணீரின் துணைக் கொண்டு தனக்கென ஒரு வேலையை தேடிக் கொள்வது மற்றும் அங்காடித் தெருவில் கூவி கூவி பத்து ரூபாய்க்கு விற்கப்படும் சட்டைகளின் பின்புலமாக இருக்கும் உழைப்பு என படத்தில் அங்கததிற்கும் குறைவில்லை. எனினும்.. கல்லூரி படிக்க வேண்டிய வயதில் வேலைக்கு செல்லும் கட்டாயம் ஏற்படுவது பலருக்கு சாதாரணமாய் நடப்பது. நடக்கும். இந்த இளம் வயதில் காதல் வயப்படுவது, அது தொடர்பான பிரச்சனைகள், அதை மீறி காதலில் சாதிக்க சூள் கொள்வதென பாரம்பரிய தமிழ்ப் படங்களின் குறுகிய வட்டம் இப்படத்திலும் உடைப்படவில்லை.
'அங்காடித் தெரு'வுக்கள் நுழைந்து விட்டு திரும்புவர்களுக்கு நெகிழ்ச்சியும், நிறைவும் நிச்சயம்.