திரைவிமர்சனம்

-

நான் மகான் அல்ல
இது தமிழ் Saturday, August 21, 2010 Comments

நான் மகான் அல்ல- பையா படத்திற்கு பிறகு நாயகன் கார்த்தி வெண்ணிலா கபடிகுழு இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம். தன் கண் முன் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு கோபப்படும் ஒரு மன்னிக்க விரும்பாத சாமான்யன் சொல்லும் கூற்றாக தலைப்பினை பொருள் கொள்ளலாம்.

எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடாமல் அந்தந்த நொடியிலேயே தனக்கு வேண்டியதை நம்பிக்கையுடன் அணுகும் சாதாரணன் ஜீவா. நண்பியின் கல்யாணத்தில் பார்க்கும் ப்ரியா மீது பார்த்ததும் காதல் எழுகிறது. தனக்கே உண்டான பிரத்யேக கலப்பான பாணியில் அவள் ப்ரியாவின் மனதை வெல்கிறான். ஜீவாவின் தந்தை ஒரு பெண்ணின் கொலைக்கு சாட்சியாக தன்னை காவல் துறையினரிடம் வெளிப்படுத்திக் கொள்ள, கொலையாளிகளால் கொல்லப்படுகிறார். கொலையாளிகளை அடையாளம் காணும் ஜீவா எடுக்கும் நடவடிக்கைகளோடு படம் நிறைவுறுகிறது.

கார்த்தி நாயகனாக. தன் கண் எதிரில் ஏதேனும் குழந்தைகளை பார்த்தால், கண் ஜாடை செய்யாமல் கடக்காத ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தியுள்ளார். எதையும் மனதில் வைக்காமல் முகத்திற்கு நேராக போட்டு உடைத்து விட்டு, அடுத்த நொடியில் அழகாக சிரிக்கிறார். குழந்தையிடம் இருந்து பலூன் பிடுங்கி நண்பிக்கு தருவது, வேலைக்கு செல்லும் இடத்தில் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கி தருவது, சிறுவர்களுடன் கிரிக்கெட் பார்ப்பது, பெரிய தாதா ஒருவரை பேசியே வசப்படுத்துவது என காட்சிக்கு காட்சி முதல் பகுதியின் கலகலப்பிற்கு முழு பொறுப்பேற்கிறார். சண்டைக் காட்சிகளில் தனித்து தெரிகிறார். தொடர்ந்து நான்காவது படத்திலும் அதிர்ஷடக் காற்று அவர் பக்கம் வீசுகிறது என்றே சொல்ல வேண்டும்.

காஜல் அகர்வால் நாயகியாக. அழகான ப்ரியாவாய் கச்சிதமான முகபாவங்களில் அசத்துகிறார். நாயகனை பார்த்து இளிக்கும் பொழுதும், தோழியை பக்கத்தில் வைத்துக் கொண்டு நாயகனுடன் பேசும் பொழுதும், தந்தை பின் நின்று நாயகனை வெளியேற சொல்லும் பொழுதும், குளியலறையில் இருந்து செல்லிடப்பேசியில் பேசும் பொழுதும், வேலையை விட்டு வரும் நாயகனை முறைக்கும் பொழுதும் என பல இடங்களில் நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகியை குழந்தை போல் உடை உடுத்த வைக்காமலும், கிறுக்குத்தனமான பாத்திரமாகவும் காட்டாமலும் விட்ட இயக்குனருக்கு பாராட்டுகளை சொல்லிக் கொள்கிறோம்.

ஜெயப்ரகாஷ் நாயகனின் தந்தையாக. சிற்சில காட்சிகளில் தோன்றினாலும் அவரது கதாபாத்திர அமைப்பு அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நாயகியிடம் அவளது வயதை கேட்டு விட்டு, 'இருபத்திரண்டு வருடம் என் மகனுடன் வாழ்ந்த பிறகு உன் தந்தை சிறந்தவரா அல்லது என் மகன் சிறந்தவனா என வந்து சொல்' என்று அவர் பேசும் பொழுது ஒரு தந்தையின் பொறுப்புணர்வு அவர் முகத்தில் மிளிர்கிறது. பசங்க, நாடோடிகள் என அவர் தொடர்ந்து பொறுப்பான தந்தை பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை தொடர்களில் வலம் வரும் நீலிமா நாயகனின் நண்பியாகவும், கிருஷ்ணா ப்ரியா தங்கையாகவும் நடித்துள்ளனர். வெண்ணிலா கபடிகுழு மற்றும் களவாணியில் கலக்கிய பரோட்டா புகழ் சூரி இப்படத்தில் தொய்வுறுகிறார்.

"
இறகை போல" மற்றும் "வா வா நிலவ பிடிச்சி" என்ற இரண்டு பாட்டு பார்க்கவும், கேட்கவும் அருமை. சண்டைக் காட்சிகளில் மதியின் ஒளிப்பதிவு ஜொலிக்கிறது. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு படத்தின் பெரும் பலம்.

சுசீந்திரன். புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் நிறைந்த புகழினை ஈட்டிய வெண்ணிலா கபடிகுழுவின் இயக்குனர். சண்டைக் காட்சிகளில் நாயகன் பறந்து பறந்து அடிக்காமல் பார்த்துக் கொண்டதற்கு பாராட்டுகள். நாயகன், நாயகி என முக்கிய பாத்திரங்கள் மட்டுமல்லாமல் உணவகத்தில் பணிபுரிபவர், கீழ் வீட்டில் குடியிருக்கும் காக்கா ஓட்டும் பெண், கிரிக்கெட் விளையாட அழைக்கும் பக்கத்து வீட்டு சிறுவன் என சிறு சிறு பாத்திரங்கள் மூலம் ரசிக்க வைக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் காதலர்களுக்கு நேரிடும் ஆபத்தை குறிப்பிடும் காட்சிகளிலிருந்து படத்தை தொடங்குகிறார். முதல் பாதி படத்தில் உள்ள கலகலப்பும், சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் மறைந்து விடுகிறது. படத்தில் காண்பிக்கப்படும் கொலைகளும், அதன் பின்னால் நெளியும் காமம் கலந்த வன்மம் கொண்ட காரணங்களும் அது படமாக்கப்பட்ட காட்சி எல்லைகளை மீறி நெருட வைக்கிறது. கேட்பார் யாருமில்லையோ என கருதும்படி கொலைகள் சர்வ சாதாரணமாய நிகழ்கிறது.

நான் மகான் அல்ல- முதல் பகுதி கலகலப்பு, இரண்டாம் பாதி சலசலப்பு.