"கச்சேரி ஆரம்பம்"- பெயரிலேயே சூசகமாக எச்சரிக்கின்றனர்.
கிராமம் விட்டு சென்னை வரும் இளைஞன் 'பாரி' முழிப்பது நாயகி 'மதி' முகத்தில். உடனே காதல் உதயம். உதயமாகும் காதலுக்கு ஒரு வில்லன். அந்த வில்லனை சமாளித்து காதலில் நாயகன் வெல்கிறானா என்ற ஆதர்ச பழைய கதை.
ஜீவா நாயகனாக. ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்ளோ முடியுமோ அவ்ளோ பேசி சோதிக்கிறார். 'ரன்னிங் கமென்ட்ரி போல நடு நடுவில் படத்தை பற்றி அவரே சொல்கிறார். உதாரணத்திற்கு நாயகியை ஒரு இடத்தில் கட்டிப் பிடிக்கும் பொழுது, 'பயப்படாதீங்க சாங் எதுவும் இல்லை' என்று பாலை வார்த்து சோதிக்கிறார். மொக்கை தவிர வேறில்லை எனினும் சிரித்த முகமாக நன்றாக தான் செய்துள்ளார்.
பூனம் பஜ்வா கதாநாயகியாக. வேலை சோகமாய் இருத்தல், பாட்டுக்கு நடனமாடுதல், கொஞ்சம் புன்னகைப்பது. அமோகா என்ற பெயர் கொண்ட ஜேஜே படத்தின் அறிமுக நாயகி நிஷா கோத்தாரி என்ற பெயரில் தலை காட்டி 'வாடா.. வாடா..' என்ற குத்துப் பாட்டிற்கு ஆடி விட்டு மறைகிறார்.
ஜே.டி.சக்கரவர்த்தி வில்லனாக. நாயகன் போலவே வலம் வருகிறார். ஏனோ இயக்குனர் வில்லனை முட்டாளகவே காண்பிக்கிறார். வில்லனை முட்டாள் என்று நாயகன் சொல்லும் பொழுது இயக்குனர் திரையரங்குகளில் உள்ளவர்களை பார்த்து சொல்வது போலவே உள்ளது.
வடிவேலு. படத்தின் முதல் பாதி சுவாரஸ்யத்திற்கு உதவினாலும், புதிதாய் வியந்து சிலாகிப்பதற்கு எதுவுமில்லை. நாயகனின் தந்தையாக இயக்குனர் அழகம் பெருமாள் சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார்.
(திரையரங்கில் படத்தில் வரும் ஒட்டு மொத்த மொக்கைகளையும் பொறுத்துக் கொண்டிருந்து விட்டு.. தற்போது இவ்விமர்சனத்தை எழுதுவது 'இது தமிழ்' குழுமத்தின் பொறுமைசாலி ஒருவர்.)
இசை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் மசாலா படத்திற்கு தேவையான அளவு.
திரைவண்ணன். தனது முதல் படத்தை இயக்கியுள்ளார். 'பெற்றெடுத்த அன்னை தத்தெடுத்த சென்னை' எனத் தொடங்கி படம் தொடங்கும் முன் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மற்றும் இயக்குனர் சீமானுக்கு நன்றி சொல்கிறார். நல்ல கதையம்சம் உள்ள படம் எடுத்திருந்தாலே அவர்களுக்கான நன்றி தானாகவே செலுத்தப்பட்டிருக்கும். பத்தாயிரத்து எட்டாவது தடவையாக தமிழ்ப் படத்தின் நாயகன் சென்னை வருவதோடு மட்டுமல்லாமல் முதல் பார்வையிலேயே காதலிலும் விழுகிறான். 'தமிழ்ப் படம்' போல் மற்ற தமிழ்ப் படங்களை கொஞ்சமாக பகடி செய்யவும் முயன்றுள்ளது சுத்தமாக இங்கு எடுபடவில்லை. நாயகன் அடித்து வானத்தில் பலமுறை சுழன்று தரைத் தொடும் அடியாட்கள் ஏராளம்.
'அவன் வரட்டும் ஒரு கை பார்க்கிறேன்' என்பதை 'அவன் வரட்டும் கச்சேரி வச்சிக்கிறேன்' என்றும் கோபத்தில் சொல்வார்கள். அதையே தான் இயக்குனர் ரசிகர்களைப் பார்த்து தலைப்பின் மூலம் சொல்கிறாரோ என சந்தேகம் எழுகிறது.