கனவு வேட்டை

கனவு வேட்டை- இன்செப்ஷன் என்ற ஆங்கிலப் படத்தின் மொழிபெயர்ப்பு ஆகும். இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற தி டார்க் நைட் என்ற வெற்றிப் படத்தின் இயக்குனர் க்ரிஸ்டோஃபர் நோலன் மேலுள்ள நம்பிக்கையில் படம் வெளிவரும் முன்னே பெரும் பொருட் செலவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டது வார்னர் மற்றும் லெஜன்டரி பிக்சர்ஸ்.

மற்றவர்கள் கனவிற்குள் சென்று அவர்களது உள்ளுணர்வில் பதுங்கியிருக்கும் ரகசியங்களை எடுப்பவன் நாயகன் காப். உண்மை போலவே காணப்படும் கனவுகளில் தான் உள்ளோமா அல்லது நினைவுலகில் உள்ளோமா என அறிய நாயகன் தன்னுடன் எப்பொழுதும் ஒரு குட்டி உலோக பம்பரம் வைத்திருப்பான். பம்பரத்தை சுழற்றி விட்ட சில நொடிகளில் அது துவண்டு விழுந்தால் அது நினைவுலகம்; நிற்காமல் சுற்றினால் அது கனவாகும். சைட்டோ என்பவர் நாயகனை தனது போட்டி நிறுவனரின் மகனான ராபர்ட் ஃபிஷர் என்பவரது மனதில், தனது தந்தையின் நிறுவனத்தை விட்டு விலகும் படியாக ஒரு எண்ணத்தை விதைக்க சொல்கிறார். அப்படி செய்வதன் மூலம் சைட்டோ போட்டியின்றி தொழிலில் முதலிடத்திற்கு முன்னேறி விடுவார். எடுத்தே பழக்கப்பட்ட நாயகன் மற்றவர் கனவில் எண்ணங்களை விதைக்க யோசிக்கும் பொழுது, நாயகன் தனது குழந்தைகளோடு சேர உதவி செய்வதாக வாக்களிக்கிறார் சைட்டோ.  தனது நண்பன் ஆர்தருடன் சேர்ந்து மேலும் சில நபர்களை ஒரு குழுவாக சேர்த்து அப்பணியில் இறங்க முயற்சி செய்கிறான் நாயகன் காப். முதலாவதாக கனவில் விரும்பும் வடிவம் எடுக்கும் ஏம்ஸ். இரண்டாவதாக மயக்க மருந்துகள் தயாரிக்கும் வேதியியல் நிபுனன் யூசுஃப். மூன்றாவதாக கனவிற்கான இடங்களை வடிவமைக்கும் கட்டிடக் கலைஞர் அரியட்னி என்னும் பெண். இவர்களுடன் சைட்டோவும் செல்கிறார்.

நடுவில் ஒரு உப கதை: காப் மற்றும் அவரது மனைவி தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை நிர்மாணித்து தனித்து வாழ்ந்து வருவார்கள். கனவிலிருந்து விழிக்க கனவில் இறந்து ஆக வேண்டும் (அல்லது தற்கொலை). கனவுலகிலிருந்து உண்மை உலகத்திற்கு வந்தும், தான் கனவே காண்கிறோமென அவள் நம்பும்படி மனைவியின் உள்ளத்தில் எண்ணத்தை விதைக்கிறான் காப்.  விளையாட்டு வினையாவது போல, கனவிலிருந்து துயிலெழ நினைத்து நினைவுலகில் தற்கொலை செய்துக் கொள்கிறாள். தான் மரணித்தால் அதற்கு காரணம் தன் கணவன் காப் தான் என கடிதம் வேறு எழுதி விடுகிறாள். இதனால் காப் தனது குழந்தைகள் பிரிந்து தலைமறைவாக வாழ்கிறான். இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக தான் சைட்டோவின் வாக்குறுதி. மனைவியின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்ற குற்றயுணர்வை நாயகன் சுமந்து வருவதால், இறந்த அவன் மனைவி அடிக்கடி நாயகனின் உள்ளுணர்வில் புகுந்து அவனது கனவுலகத்தில் சஞ்சாரித்து இவனுக்கு எதிரான காரியங்களில் இறங்குகிறாள். அதற்கு காரணம் மனைவியை தனது ஞாபகங்களில் ஒரு தனி இடத்தில் சிறைப் பிடித்து, இறந்த பின்பும் கனவுலகில் சென்று பார்த்து வருவான்.

தந்தையின் ஈம காரியங்களுக்காக லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சிட்னி கிளம்பும் ராபர்ட் ஃபிஷருடன் விமானத்தில் நாயகன் குழு பயணிக்கிறது. முதலில் யூசுஃப்பின் கனவுக்குள் நுழைபவர்கள் முகமூடி அணிந்து ஃபிஷரை கடத்துகின்றனர். ஆனால் ஃபிஷருக்கே இருக்கும் இயற்கையான உள்மன பாதுகாப்பு உணர்வுகள் நாயகன் குழுவிற்கு ஆபத்தை விளைவிக்கிறது. அதில் சைட்டோ குண்டடிப் படுகிறார். மயக்க மருந்தின் உதவியோடு கனவுக்குள் வந்ததால், கனவில் இறந்தவுடன் விழிப்பதற்கு பதில் கோமாவிற்கு அல்லது நிரந்திர கனவிற்கு சென்று விடுவனர். ஃபிஷரின் தந்தை இறந்த பொழுது உடனிருந்த பீட்டர் ப்ரெளனிங் போன்று ஏம்ஸ் உருமாறி ஃபிஷரை ஏமாற்றுகிறார். ஃபிஷரை வேனில் ஏற்றும் நாயகன் குழு, ஆர்தர் மூலமாக கனவிற்குள் இரண்டாம் கனவிற்கு செல்கின்றனர். ப்ரெளனிங் தான் முதற் கனவில் புகுந்து ஃபிஷரை கடத்த முயற்சித்ததாக நாயகன் ஃபிஷரை நம்ப வைக்கிறான். ப்ரெளனிங்கின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய ஏம்ஸ் மூலமாக கனவிற்குள் மூன்றாம் கனவிற்கு செல்கின்றனர். நாயகனின் உள்ளுணர்வு மூலமாக வரும் அவனது மனைவி ஃபிஷரை கொன்று விடுகிறாள்.

நிரந்திர கனவில் மாட்டிக் கொள்ளும் ஃபிஷரை மீட்க நாயகனும், அரியட்னியும் நான்காம் கட்ட கனவிற்குள் செல்கின்றனர். மூன்றாம் கட்ட கனவில் இருக்கும் சைட்டோவும் இறந்து விடுகிறான். கனவிலே இருந்து விடலாம் என சொல்லும் நாயகியிடம், தான் செய்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு ஃபிஷர் இருக்கும் இடத்தை அறிகிறான். நாயகனை தன்னுடனே தங்க வைக்க அவனை கொல்ல முயலும் நாயகியை அரியட்னி சுட்டு விட்டு, ஃபிஷருடன் மூன்றாம் கட்ட கனவிற்கு வந்து விடுகிறாள். ஏம்சின் கனவில் இருக்கும் ஃபிஷர் தன் தந்தையிடம் பேசி, அவர் தன்னை சொந்த காலில் நிற்க சொல்கிறார் என்ற எண்ணத்திற்கு தள்ளப் படுகிறான். நான்காம் கனவில் இருக்கும் நாயகன், நிரந்திர கனவில் சிக்கியிருக்கும் சைட்டோவை மீட்க போராடிகிறான். கால நழுவலில் முதியவர் ஆகி விட்ட சைட்டோவிடம், இதெல்லாம் கனவு மீண்டு வாருங்கள் (தற்கொலை) என சொல்கிறான் நாயகன்.

அடுத்த காட்சியில் அனைவரும் விமானத்தில் கனவிலிருந்து எழுகிறார்கள். நாயகன் தன் குழந்தைகளை காண வீட்டிற்கு செல்கிறான். மேசை மேல் பம்பரத்தை சுழற்றுகிறான். பம்பரம் நின்றதா, நிற்காமல் சுற்றியதா என்பதோடு படம் நிறைவுறுகிறது.

இந்த படத்தில் நன்கு அறிமுகமான ஒரே நபர் நாயகன் டைட்டானிக் ஜாக் லியனார்டோ டி காப்ரியோ மட்டுமே. தன் குழந்தைகளை பார்க்க துடிக்கும் ஏக்கத்தையும், மனைவியின் மரணத்திற்கு காரணமாகி விட்ட குற்றவுணர்வையும், தொல்லை தரும் மனைவியின் நினைவுகளை அழிக்க விரும்பாத காதலையும் அழகாக பிரதிபலித்துள்ளார். 

படத்தில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இன்னொரு நபர் அமெரிக்க வாழ் இந்திய பெற்றொர்களின் மகனான திலீப் ராவ். வேதியியல் நிபுனன் யூசுஃப்பாக நடித்துள்ளார். அவதார் படத்திலும் நாயகனை ராணுவ அதிகாரி கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் மருத்துவராக இவரை பார்த்திருக்கலாம்.

க்ரிஸ்டோஃபர் நோலன். தலையை சுழல வைக்கும் கதையை அற்புதமான திரைக்கதையாக மாற்றியுள்ளார். இரண்டு நபர்கள் காதலிக்கிறார்கள் கல்யாணம் செய்கிறார்கள் என்ற ஆதர்ச வழக்கமான கதைகளில் ஆயிரம் தர்க்க ஓட்டைகளோடு வரும் படங்களின் மத்தியில், இந்த சவலான திரைக்கதையை லாவகமாக எடுத்து சென்றிருக்கும் அவரது திறமையை வியக்காமல் இருக்க முடியாது. முதல் கனவில் இருந்து ஆர்தர் மூலமாக இரண்டாம் கனவிற்கு செல்லும் பொழுது, முதல் கனவில் யூசுஃப் ஓட்டிக் கொண்டிருக்கும்  கார் கட்டுப்பாடு இழந்து உருள்கிறது. காருக்குள் இருக்கும் ஆர்தர் காரின் விசையோடு சேர்ந்து உருளுகிறான். அப்பொழுது இரண்டாம் கனவில் புவி ஈர்ப்பு திசையில் பாதிப்பாகி எல்லாரும் மிதக்க ஆரம்பிக்கின்றனர். எதார்த்த உலகினை விட கனவு உலகில் நேரம் துரிதமாக பயணிக்கிறது. முதல் கனவின் கால அளவு இரண்டாம் கட்டத்தில் அதிகமாகவும், மூன்றாம் கட்டத்தில் அதைவிட அதிகமாகவும் உள்ளது. உதாரணத்திற்கு எதார்த்த உலகில் நிகழும் லாஸ் ஏஞ்சல்ஸ்- சிட்னி விமான பயண நேரம், நான்காம் கட்ட கனவில் 50 வருடங்களுக்கு சமம். இது போன்ற கனவுலகத்திற்கு என பிரத்யேக விதிகளையும் திரைக்கதையோடு பார்வையாளர்களுக்கு புரிய வைத்து விடுகிறார். முதல் கட்டத்தில் யூசுஃப் ஓட்டும் வாகனம் விபத்துக்குள்ளாவது, இரண்டாம் கட்டத்தில் ஆர்தர் மின் தூக்கியில் சிக்கி இருப்பது, மூன்றாம் கட்டத்தில் கோட்டையை தகர்க்க ஏம்ஸ் பனி மலையில் வைக்கும் வெடிகள் என்று ஒருங்கே நிகழும் மூன்று கனவுகளையும், அதன் கால அளவுகளையும் காட்சிகளாக வித்தியாசப்படுத்தி அருமையாக அசத்தியுள்ளனர். படத்தொகுப்பு கன கச்சிதம். நான்கு கட்ட கனவுகளென காட்சிகள் குழப்பமின்றி அநாயாசமாக பயணிக்கின்றன. கனவு கலையும் பொழுது சிதைவுறும் கனவு உலகம்; நான்காம் கட்ட கனவில் வரும் இடங்கள்; சாலையின் முடிவில் இருந்து செங்குத்தாக நீண்டு வானத்தை மறைத்து சதுரமாக மூடிக் கொள்ளும் சாலை என்று படத்தில் வரும் கிராஃபிக்ஸ் வேலைப்பாடுகள் பிசிறு தட்டாமல் அற்புதமாக உள்ளது.

க்ரிஸ்டோஃபர் நோலன் தனது அற்புதமான கதை சொல்லும் பாங்கின் மூலமாக படம் பார்ப்பவர்களையும் கனவுலகத்திற்குள் மிதக்க விட்டு விடுகிறார்.






ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 179
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)