தம்பிக்கு இந்த ஊரு


"தம்பிக்கு இந்த ஊரு" - சின்ன தளபதி பரத் நடித்து வெளியாகி இருக்கும் புத்தம் புதிய படம்.

சிங்கப்பூரில் இருக்கும் நாயகனுக்கு அவனது பெற்றோர்கள், அவனை வளர்த்தவர்கள் என்று தெரிய வருகிறது. பெற்றவர்களை தேடி இந்தியா வரும் நாயகன், நாயகிக்கு ஏற்படும் பிரச்சனையில் மூக்கை நுழைத்து வம்பில் சிக்கிக் கொள்கிறார். அந்த வம்பில் இருந்து நாயகன் தப்பினாரா? தப்பி பெற்றோர்களை கண்டுபிடித்தாரா? நாயகியின் கரம் பற்றினாரா? என்று அரைத்த மாவை முடிந்த அளவு அரைத்து விட்டு படம் சுபம்.

பரத் நாயகனாக. காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். படங்களில் நடிக்க விட்டாலும் கூட 'காதல்', 'வெயில்' போன்ற படங்களில் நடித்தவர் என கொண்டாடலாம். ஆனால் பரத் இதே போன்று கதை தேர்ந்தெடுத்து நடித்தால் அவரே கூட அவர் படத்தை திரையரங்கில் பார்க்க முடியாத அளவு நிலைமை மிக மோசமாகி விடும். 'தம்பிக்கு இந்த ஊரு' பாட்டில் விஜய் போல் உடை அணிந்து வருவதோடு, விஜய் பாணியில் நடன இயக்குனரோடு சேர்ந்து ஆடுகிறார் பரத்.

சனா கான் நாயகியாக. அல்லது நாயகனுக்கு படத்தில் நேர்ந்து விடப்பட்ட பெண் கதாபாத்திரம்.

பிரபு குணசித்திர நடிகராக. ஊரே பயந்து நடுங்கும் நல்ல குணமுள்ள 'தாதா' தொழிலதிபர். தோன்றும் பொழுதெல்லாம் திரையை அடைத்துக் கொள்கிறார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழி இவருக்கு பொருந்தும். துண்டு துக்கடா பாத்திரம் எனினும், திரைக்கதைக்கு முக்கியமானவர் என்ற முலாம் பூசி இரண்டாம் நாயகன் அளவுக்கு உசுப்பி விடுகின்றனர். அவர் தோன்றும் படங்கள் வியாபார ரீதியாக வெற்றிப் பெற்று வருகின்றது என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம்.

விவேக். அவர் நகைச்சுவை நடிகர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் மட்டும் சில காட்சிகளை ரசிக்கலாம். ஆனால் எம்.எஸ்.பாஸ்கர் எப்பொழுதும் போல் கலக்கியுள்ளார்.
 
இயக்குனர் பத்ரி. கோடை பருவத்தின் ஒரு வெப்பம் மிகுந்த வாரத்தில் வீட்டில் அமர்ந்து, அந்த வாரத்தின் 'கே.டிவி' படங்கள் முழுவதும் பார்த்திருபார் போல். அந்த வாரம் அவர் பார்த்த அனைத்து படத்தையும் சேர்த்து ஒரே படமாக உருவாக்கியுள்ளார். இருபது, முப்பது வருட ஆதர்ச பழைய கதை. தொழில்நுட்ப நேர்த்தியும் அந்த காலக்கட்டத்தினை தாண்டவில்லை. 'வீராப்பு', 'ஐந்தாம் படை' தொடர்ந்து பத்ரிக்கு இது மூன்றாவது படம் என்பது மேலும் அதிர்ச்சியளிக்க கூடிய உப தகவல். தேடி கண்டுபிடித்து ஆறுதல் அடைய, வில்லன் 'ரஞ்சித்'தின் அதிகம் கத்தி உயிரெடுக்காத இரக்க குணத்தினை சொல்லலாம். படத்தின் 'ப்ளாஷ்- பேக் கிரிக்கெட் போட்டியின் மறுநாள் ஒளிபரப்பாகும் 'ஹைலைட்ஸ் போல் உள்ளது. வசனங்கள் முதல் கொண்டு படத்தில் வரும் அனைத்தையும் நாம் முன் கூட்டியே யூகித்து விடலாம்.

தம்பிக்கு இந்த ஊரு தானா என்ற சந்தேகம் படம் பார்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக எழும். இந்த ஊரில் பல தடவை சொல்லி அலுத்துப் போன ஓர் கதையை மீண்டும் தூசு தட்டி எடுத்ததோடு மட்டுமல்லாமல், சுவாரஸ்யமும் திருப்பமும் லவலேசமும் சேர்க்காமல் அப்படியே படைத்திருக்கும் அவர்களின் நெஞ்சுரத்தை வியக்காமல் இருக்க முடியாது.


ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 449
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
சாம்ராஜ் பதிந்த நேரம் :11-03-2010 08:37:45
இம்மாரி படமெத்தா.. 'டமில்' சினிமா விளங்கு மாங்ஙெ!!