சிங்கம்- சூர்யா நடித்திருக்கும் இயக்குனர் ஹரியின் வணிக மசாலா படம். எங்கே 'சாமி' மற்றும் 'வேல்' இரண்டையும் சேர்த்து சிங்கமாக உலவ விட்டுள்ளாரோ என ஐயமோ, அச்சமோ எவருக்கேனும் எழலாம். ஆனால் படம் தொய்வற்று மின்னல் வேகத்தில் நகருவதால் எதுவும் புலப்படாது. இது சூர்யாவின் இருபத்தைந்தாவது படம் என்ற கூடுதல் பெருமையும் இப்படத்திற்கு உண்டு.
சூர்யா 'துரைசிங்கம்' என்ற பாத்திரத்தில் நாயகனாக படம் முழுவதும் நிறைந்துள்ளார். நல்லவர். 'நல்லூர்' எனும் சொந்த ஊரில் காவற்காரராக பணி புரிகிறார். வீரர். தீரர். சூரர். அப்படியே மிகவும் நேர்மையாக இருப்பதால் பதவி உயர்வுடன் சென்னையின் திருவான்மியூருக்கு மாற்றலாக்கப் படுகிறார் வில்லனால். வில்லனுடன் சவால்கள், சீண்டல்கள் என தொடர்ந்து நாயகனின் வெற்றியுடன் படம் சுபமாக நிறைவுறுகிறது. கே.எஸ்.ரவிக்குமார், ஹரியை தொடர்ந்து சூர்யா பேரரசிடம் செல்லாமல் இருந்தால் சரி தான்!!
அனுஷ்கா 'காவ்யா' என்ற பாத்திரத்தில் நாயகியாக முடிந்த பொழுதெல்லாம் அழகாய் தலைக் காட்டுகிறார். பாடல் காட்சிகளில் தோன்றும் பொழுது உடைகளின் சிக்கணத்தில் தாராளமாயுள்ளார். மிகவும் ஜாக்கிரதையாக காட்சிகள் அமைக்கப் பட்டாலும் நாயகனை விட நாயகி உயரமோ என்ற சந்தேகத்தை சில இடங்களில் எழ செய்து விடுகிறார்.
பிரகாஷ் ராஜ். படத்தின் பலம் அல்லது வில்லன். தோன்றியது முதல் மறைவது வரை படத்தில் வரும் இடமெங்கும் அசத்துகிறார். தம்பி இறக்கும் போது அவர் முகம் சோர்வடைகிறது. அது நடிப்பா அல்லது இன்னும் எத்தனை நாள் என்னை இந்த பாத்திரத்திலேயே வைத்திருப்பீர்கள் என்ற அங்கலாய்ப்பால் ஏற்பட்ட உண்மை சோர்வா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
விவேக். சிரிக்க வைக்க முயலும் நகைச்சுவையாளாராக. அது, இது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது என்று ஏதேதோ செய்கிறார். மகன் துரைசிங்கத்தை எண்ணி பெருமைப்படும் பாத்திரத்தில் ராதா ரவி; ராதா ரவியின் வெள்ளந்தி மனத்தை நினைத்து கலங்கும் பாத்திரத்தில் காவ்யாவின் தந்தை நாசர்; காசுக்கும், ஓட்டுக்கும் அரசியலுக்கு வராத உள்துறை அமைச்சர் பாத்திரத்தில் விஜயகுமார் என பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ப்ரியன். பிரமாதப்படுத்தி உள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளும், பாடல்களிலும் அதை காணலாம். ஆனால் நாயகன் அடித்தால் ஆட்கள் அரை கி.மீ. தூரம் தள்ளி விழும் இந்த கண் கட்டு சர்க்கஸ் கொஞ்சம் அதிகமெனினும் மிகவும் நெருடவில்லை என்பது ஆறுதல் அல்லது வெட்டி சமாதானம். படத் தொகுப்பாளர் வி.டி.விஜயன் ஒளிப்பதிவின் அழகை எல்லாம் மிக அழகாய் தொகுத்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் சுமாராய் கேட்கும்படி இருந்தாலும், பிண்ணனி இசை சோபிக்கவில்லை.
இயக்குனர் ஹரி. எப்படியும் படம் பார்ப்பவர்களின் பொழுதை கழிக்க வைத்து விடுகிறார். பார்ப்பவர்களை யோசிக்க விடாமல் அடுத்தடுத்து என காட்சிகள் வரிந்துக் கட்டிக் கொண்டு வருகின்றன. மசாலா படத்தின் பலம் அதுவே. வில்லனுக்கு எதிராக சூர்யா எடுக்கும் சில முடிவுகள் சுவாரஸ்யப் படுத்துகின்றன. எப்பொழுதும் சூர்யா தன்னைச் சுற்றி நடப்பதை கவனித்த வண்ணம் இருப்பதென திரைக்கதை குறைகளை தன்னுள் மறைத்து வணிக வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளன.
படத்தின் முடிவு ஹாலிவுட் தரத்திற்கு உள்ளதென்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் இரண்டாம் பாகத்திற்கான ஒரு சிறு இழையோடு படம் முடிகிறது.