"விண்ணைத் தாண்டி வருவாயா"- காரண காரியங்கள் எதுவும் சரி வர மூளைக்கு புரியும் முன், தன்னைக் கடந்து செல்லும் பெண்ணின் மேல் எழுகின்ற காதலை மனம் முழுவதும் நிறைத்து ஏக்கங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் அப்பெண்ணின் கரம் பற்றி, கண் பார்த்து நாயகன் கேட்பதாக தலைப்பை பொருள் கொள்ளலாம்.
மச்சில் தங்கி இருக்கும் வீட்டு உரிமையாளரின் பெண்ணை காதலிக்கிறான் வாடகைக்கு வரும் நாயகன். ஒரு வயது இளையவன் எனத் தெரிந்தும் நாயகன் பால் காதல் கொள்ளும் நாயகி, காதலையும் மறைக்க முடியாமல் தந்தையின் விருப்பத்தையும் மீற முடியாமல் இரு தலை கொல்லி எறும்பாக தவிக்கிறார். அந்த தவிப்புடன் நாயகி எடுக்கும் முடிவை சுமந்து படம் அழகிய எதிர்பாராத திருப்பத்துடன் நிறைவேறுகிறது.
"யங் சூப்பர் ஸ்டார்" சிம்பு என்கிற அறிமுக நடிகர் தான் இப்படத்தின் நாயகன். கார்த்திக் என்ற பெயரில் துணை இயக்குனராக இருந்து பட முடிவில் இயக்குனர் ஆகி விடுகிறார். ஆர்பாட்டமில்லாத, அமைதியான, எதார்த்த நடிப்பில் எரிச்சலூட்டாமல் அசத்துகிறார். இது நாயகனுக்குரிய படம். கதை சொல்லியாக நாயகனே பெரும்பாலான படத்தை நகர்த்துகிறார். எத்தனையோ வருடமாக தமிழ்ப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவருக்கு இப்படம் ஓர் மைல் கல் என்றால் அது மிகையல்ல.
த்ரிஷா. 'ஜெஸ்சி' என்னும் பக்கத்து வீட்டு மலையாள கிறிஸ்துவ பெண்ணாக வருகிறார். பக்கத்து வீட்டு பெண் தானே என அலட்சியமாக இருக்க முடியாது. கண்டிப்பாக திரும்பி பார்க்க வைக்கும் நளினம், புன்னகை மற்றும் மென்மை. 'கல்யாணம் தான் கட்டிக்கிட்டு... அப்படி போடு... ' என்ற எந்த கருத்துள்ள பாடல்களுக்கு ஆடி விட்டு மட்டும் போகாமல் பொலிவான முக பாவனைகளால் கவர்கிறார். நாயகனை போல் நாயகிக்கும் சரி நிகராக நடிக்க வேண்டிய கட்டாயம். நடித்தும் உள்ளார் த்ரிஷா. குழப்பி குழப்பி நாயகன் மற்றும் படம் பார்ப்பவர்களை நன்றாக அலைக் கழிக்கிறார். காதலர்களுக்கென உருவாகும் தனி உலகில் நாயகியான த்ரிஷா அவ்ளோ அழகு.
நாயகனின் நண்பராக வரும் 'கணேஷ் தனது கரகரத்த குரலில், "ஏய் தம்பி.." என பேச ஆரம்பிக்கும் பொழுது ரசிக்க வைக்கிறார். திரைப்பட ஒளிப்பதிவாளராக வரும் இவர் நாயகனை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக சேர்த்து விடுகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனராகவே சிறப்பு தோற்றம் ஏற்றுள்ளார். படத்தில் நாயகன் இயக்கும் படத்தில் நாக சைதன்யா நாயகனாகவும், சமந்தா ருத் பிரபு நாயகியாகவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்த ஜோடி தெலுங்கில் நாயகன், நாயகியாகவும்.. சிம்பு, த்ரிஷா ஜோடி அப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர்.
மனோஜ் பரம்ஹம்சா. ஈரம் படத்தில் ஒளிப்பதிவின் மூலம் படம் பார்ப்பவர்களை குளிர வைத்தவர். த்ரிஷாவையும், சிம்புவையும் மிக அழகாக காட்டி உள்ளார். முக்கியமாக படத்தில் வரும் வீடுகளின் அழகையும், கேரள தண்ணிர் துறையையும், அமெரிக்க பூங்காவில் நடக்கும் 'க்ளோஸ்-அப் காட்சிகளும் என சொல்லிக் கொண்டே போகலாம். இவரின் கேமிரா பிடித்த அனைத்து அழகையும் படத்தொகுப்பாளர் ஆன்டனி மேலும் அழகுற தொகுத்தளித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கெளதம் மேனன் மற்றும் சிம்புவுடன் இணைந்துள்ளார். படம் வெளி வரும் முன்பே பாடல்கள் வெற்றிப் பெற்று விட்டன. பாடல்களை மனோஜின் ஒளிப்பதிவோடு பார்த்தால்.. பார்த்தால் தான் புரியும் அதன் அருமை. பிண்ணனி இசையும் அசத்தல்.
கெளதம் வாசுதேவ் மேனன். புதிதாய் எதுவும் இல்லை. எப்பொழுதும் போல் அழகான படம். வழக்கமான கவித்துவ காட்சிகளுடன். இவர் ஏன் பாடல்களில் நாயகன் நாயகியை நடக்க விட்டு, பின்னால் வெள்ளைக்காரர்களை இஷ்டத்திற்கு வளைந்து வளைந்து ஆட விடுகின்றார் என தெரியவில்லை. நாயகன் நாயகி இருவரிடமும் தெரியும் மனமுதிர்ச்சியும், பக்குவமும் இவரது அனைத்து படத்திலுமேயே ஒரே போலவே உள்ளன. படத்தின் முடிவு புதுமையாக இருந்தாலும் அனைவருக்கும் பளிச்சென புரியுமா என்பதில் சிறிய ஐயம் ஏற்பட செய்கிறது. 'மின்னலே படம் மூலம் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் திரையரங்கையே சுற்றி சுற்றி வர செய்தார். மீண்டும் ஒரு முறை அது நிகழும் வாய்ப்பு அதிகம் எனினும் அனைத்து மட்ட ரசிகர்களையும் இப்படம் திருப்தி செய்யுமா என்பது சந்தேகம் தான்.
இப்படம் விண்ணைத் தாண்ட சிலரையேனும் தூண்டாமல் இருந்தால் அது ஆச்சரியம் தான்.