"ராணிக்கா.. கொஞ்சம் ரசப்பொடி தாயேன். வீட்ல விருந்தாளிகள் வந்திருக்காங்க. நல்லவேள நீ வீட்ல இருக்க." இது நேற்று.
"அய்ய.. உன்ன பத்தி தெரியாதா!! ராணின்னு பெயர கேட்டா தான்.. நீ அடிச்ச கூத்த நெனைச்சு தெருவே சிரிக்குது. எனக்கு இதெல்லாம் எப்பவே தெரியும்டி. சொன்னா ஊரே சிரிக்கும்." இது இன்று.
நாளை அந்த தெரு வழியாக போனால், ஒரு நல்ல கதை கிடைக்கும். போக முடியுமா என்று தெரியவில்லை. சரி என்று அதிலிருந்து மீண்டு எப்பொழுதும் போகும் வலைத்தளங்கள் சென்றால், அங்கேயும் குழாயடி புகார்கள். கடவுள் முதல் கபட வேடதாரி வரை. முன்னாடி 'கடவுளைக் கண்டேன்' என்று வந்துக் கொண்டிருந்த தொடர், பெயர் மாற்றம் மற்றும் கருத்து மாற்றத்துடன்
"நித்யானந்தா: கபட வேடதாரியின் கலைந்த முகம்" என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. கபடதாரியை புகழவா முடியும் என்றால் கண்டிப்பாக முடியாது. செய்தி அனைத்து இடங்களிலும் பரவியவுடன், 'எனக்கு அப்பவே தெரியும்' என்ற ரீதியில் தொடை தட்டிக் கொண்டு கணினி முன் உட்கார்ந்து விட்டது ஏன்? நேற்று இரவு 'சன் குழும'த்தின் முழு நேர செய்திகள் அலைவரிசையின் மூலம் சாரு நிவேதிதாவுக்கு ஞானம் வந்திருக்கும் போல. ஆனால் அவர் கூற்று படி டிசம்பர் 2009 முடிவில் ஞானம் வந்து நித்யானந்தரை விலக ஆரம்பித்தாலும், இரண்டு 'கடவுள் கண்டேன்' தொடர்களை அதன் பின் வெளியிட்டார். ஒருவேளை விலக ஆரம்பிக்கும் முன் எழுதியதாக இருக்கும்.
ஏமாற்றமும், வருத்தமும் எல்லாருக்கும் ஏற்படக் கூடியது தான். ஆனால் அவர்
'எக்ஸிஸ்டென்ஷியலிசம் எல்லாம் தெரிந்தவர் அல்லவா.. வருத்தப்பட்டால் கெளரவ குறைச்சல் ஆகி விடும் என்பதாலோ என்னமோ,
'நான் அவரை என்றோ விலக ஆரம்பித்து விட்டேன்' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததோடு மட்டுமல்லாமல் இன்று
'அப்ரூவரும் ஆகி விட்டார். சாரு நிவேதிதாவிற்கு தோன்றும் பொழுதே எழுதி இருந்தால், சரியாக நமக்கு அவரது கபடம் புரிந்திருக்காது என்பதால் 'சன் தொலைக்காட்சி செய்திகள் வெளியாகும் வரை காத்திருந்திருக்கார். இன்று அவர் தொடங்கி இருக்கும் புது தொடரில், நித்யானந்தரின் கபடங்கள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். இனி நித்யானந்தர் கபடங்களை மகிழ்ச்சியாக தொடருவாரா என்பது சந்தேகம் எனினும், சாரு அவரது முந்தைய கபடங்களை அனுபவித்து ருசித்து அவரது வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க (வசை) கட்டுரை எழுதுவார். அதை அவர் முன்பே செய்திருந்தால், குழாயடி சண்டை போல் அருவருக்க தக்க வகையில் இருந்திருக்காது. அவர்களுக்கும், சாருவிற்கும் சில வித்தியாசங்கள் உண்டென நினைத்திருந்தேன்.
எனக்கு இன்னும் சில சந்தேகங்களை எழுப்புகிறது அவரது பதிவு. அந்த 'வீடியோக்கள் எதுவும் பொய்யாகத் தெரியவில்லையாம் அவருக்கு. அப்படி அவருக்கு கொஞ்சம் வீடியோவின் மீது நம்பிக்கை தகர்ந்திருந்தால், (வசை) கட்டுரை வேறு எவர் மீதேனும் இருந்திருக்குமோ!! அவர்
'வைரஸ் ஜூரம்' வந்து அவதிப்படும் பொழுது நித்யானந்தர் அருளியும் சரியாகவில்லை. ஆனால் நித்யானந்தர் சாருவின் கண் முன், பலரின் புற்று நோய்களை அவரது அளப்பரிய சக்தியை கொண்டு குணப்படுத்தி உள்ளார். எவ்ளவோ பண்ணும் நித்யானந்தர்.. பாவம் இவரது 'வைரஸ் ஜுரத்தினை குணப்படுத்தாதது குற்றம் தானே. அந்த கோபம் தான் தொடராகி உள்ளது போல.
சோழியும், குடுமியும் எங்கயுமே சும்மா ஆடாதோ என்னமோ!!