சச்சின் ஓர் சகாப்தம்(1)
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி 1971- ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதுமுதல் இந்த வகை கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும், 200 ரன்கள் என்ற மைல்கல் யாருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
1997-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர், விவ்ரிச் சர்ட்சின் 189 ரன்கள் சாதனையை கடந்து, 194 ரன்கள் விளாசினார். ஒரு நாள் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ரன்களாக இது பதிவானது. அதன் பிறகு அன்வரின் சாதனையை முறியடிக்க பல வீரர்கள் சிகரத்தில் ஏறி அருகில் சென்று நழுவவிட்டனர்.
கங்குலி முதல் டோனி வரை....
1999- ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி 183 ரன்களில் ஆட்டம் இழந்து, சாதனை வாய்ப்பை நழுவவிட்டார். 2 சிக்செர் அடித்தால்'அன்வரின் சாதனை முறியடிப்பு' என்ற நிலையில் அவர் கேட்ச் ஆனார். அதே ஆண்டில் நவம்பர் மாதம் சச்சின் தெண்டுல்கருக்கு வாய்ப்பு வந்தது. ஐதராபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் அவர் தனது மிரட்டலை காட்டியிருந்தால், அந்த சாதனையை முறியடித்து இருக்கலாம். அவ்வாறு நடக்காததால், அந்த ஆட்டத்தில் அவரது ஸ்கோர் 186* ரன்களுடன் நின்றுபோனது.
இதன் பிறகு, இலங்கை வீரர் ஜெயசூர்யாவுக்கு அப்படியொரு வாய்ப்பு கிட்டியது. 2000-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 189 ரன்கள் எடுத்திருந்தபோது, ௨ ஓவர்கள் மீதம் இருந்தது. இதனால் சாதனை படைத்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஸ்டம்பிங் ஆகி போனார்.
இதை தொடர்ந்து 2005-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி 183 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அத்துடன் 'சேசிங்' ஸ்கோர் முடிந்து விட்டதால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதன் பிறகு 2006- ம் ஆண்டு ஜோகனஸ்பர்க்கில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரானா ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்சின் விறு விறு பயணம் 175 ரன்னில்(32-வது ஓவரில்) முடிந்து போனது.
அடுத்ததாக, சச்சின் தெண்டுல்கருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு மே மாதம் கிறைஸ்ட் சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 163 ரன்கள் சேகரித்து இருந்த போது, வயிற்றில் ஏற்பட்ட காயத்தால் விலகநேரிட்டது. அப்போது 5 ஓவர்கள் எஞ்சி இருந்தது. ஆனால் வலி அதிகமாக இருந்ததால், வேறு வழியின்றி வெளியேறிவிட்டார்.
இச்சிறப்பை அடைவதற்காக அதிரடி நாயகர்கள் ஒரு பக்கம் மல்லுக்கட்டி கொண்டிருந்த நிலையில், சத்தமில்லாமல் ஜிம்பாப்பே வீரர் கார்லஸ் கவன்ட்ரி, அன்வரின் சாதனையை சமன் செய்தார். கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேச புலவாயோவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரானா ஆட்டத்தில் எதிர்முனை வீரரின் சரியானா ஒத்துழைப்பு இல்லாததால் அவர் 194 ரன்களுடன் நிற்க வேண்டியதாயிற்று.
இப்படி கடந்த 13 ஆண்டுகளாக அன்வரின் சாதனையை உடைக்க நடந்த ஊசலாட்ட முயற்சிகளுக்கு நேற்று(24.02.2010) முடிவு கட்டி, வரலாற்றை மாற்றியமைத்திருக்கிறார், தெண்டுல்கர்.
முத்திரை பதித்தார், தெண்டுல்கர்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று(24.02.2010) பகல்-இரவு போட்டியாக நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தெண்டுல்கர், தொடக்க ஆட்டகாரராக இறங்கினார். 2-வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை தொடங்கிய அவர், தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவரது பேட்டை முத்தமிட்ட பந்துகள், அடிக்கடி எல்லை கோட்டை கடந்தன. 90 பந்துகளில் சதத்தை கடந்த தெண்டுல்கர், செஞ்சுரிக்கு பிறகு தனது ஆட்டத்தின் வேகத்தை கூட்டினார்.
வேகத்தாக்குதல், சுழல் தாக்குதல் ஆகியவற்றை நேர்த்தியாகவும், அழகாகவும் எதிர் கொண்டு துவம்சம் செய்த தெண்டுல்கர், 43.5 ஓவரில் புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அன்வர் - கவன்ட்ரி ஆகியோரின் கூட்டுச் சாதனையான 194 ரன்கள் என்ற இலக்கை உடைத்து, ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்பை பெற்றார். இது அவருக்கு 442-வது ஒரு நாள் போட்டியாகும்.
அத்துடன், நிற்கவில்லை. 49.3ஓவரில் 200 ரன்களையும் எட்டினார். 39 ஆண்டு கால ஒரு நாள் போட்டி வரலாற்றில் 200 ரன்களை தொட்ட முதல் கிரிகெட் வீரர் என்ற மகத்தான பெருமை அவரது வசம் ஆனது. 200 ரன் என்ற அரிய சாதனையை தரிசிக்க, எல்லோரும் 2,962 ஒரு நாள் போட்டிகள் காத்திருக்க வேண்டி இருந்துள்ளது.
இந்த 2010-ம் ஆண்டு தெண்டுல்கருக்கு பொற்காலமாக அமைந்திருகிறது. இந்த ஆண்டில் அவர் விளையாடிய 4 டெஸ்டிலும் சதம் அடித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இப்போது ஒருநாள் போட்டியிலும் அற்புதம் காட்டியிருக்கிறார். 'பிப்.24- ந்தேதி' அவரது மணி மகுடத்தில் மேலும் ஒருவிலை மதிப்பற்ற மைல்கல்லை அலங்கரித்து இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி(25.02.2010)
-தொடரும்